நூல் அறிமுகம்
திருவள்ளுவர் இறைநெறி
உலகெங்கும் வாழ்கின்ற மனித இனத்தை நன்னெறிப்படுத்த ஞானியர் பலர் அவதரித்து அவர்தம்
சீரிய சிந்தனைகளை மக்களிடையை கொண்டு சேர்த்தனர். காட்டுமிராண்டி நிலையில் இருந்த மனித
சமூகம் பண்பட்ட சமூகமாக நாகரிக நிலையை அடைவேண்டுமென்று அருளாளர்கள் விரும்பினார்கள்
அதற்காகச் சிந்தித்தார்கள் செயல்பட்டார்கள்.
அந்த சிந்தனையின் உச்சம்தான் ஓர் இறைக்கோட்பாடு. அறத்தின் வடிவமாக உணர்த்தப்பெறும்
இறைவனை அடையவேண்டுமென்றால் ஒவ்வொரு மனிதனும் எப்படி வாழவேண்டும் என்று ஞானியர்கள் எடுத்துரைத்தனர்.
அப்படி அவர்கள் காட்டும் நன்னெறி ஒரு மனிதன் வாழும் காலத்தில் துன்பமின்றி வாழவும்,
மரணத்திற்குப்பின் நற்கதிக்குச் செல்லவும் வழிகாட்டுகிறது.
இப்படிப்பட்ட ஞானியர் வரிசையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றி மனித சமூகத்தைக்
காத்தளித்தவர் தெய்வப் புலவர் திருவள்ளுவர். அவர் ஆக்கியளித்த திருக்குறள் அவர்காலத்தில்
வாழ்ந்த மக்களுக்கு மட்டுமின்றி அவருக்குப்பின் வந்த மக்கள் சமூகத்திற்கும் நல்வழிகாட்டுவதாய்
விளங்கிவருகிறது. அத்திருக்குறளை காலந்தோறும் ஞான ஆசிரியர்கள் உலகோர்க்கு உபதேசித்து
வருகின்றனர். அக்கருத்துகளை அடியொற்றி புலவர் பலர் நூலியற்றி தமிழுலகுக்குத் தந்தனர்.
மனிதவாழ்க்கை என்பது எம்மாத்திரம் என அறிந்துகொள்வதற்குள் பிறந்தவன் இறந்துவிடுவதும்,
இருப்பவன் சொன்னதை மறந்துவிடுவதும் உலகத்து இயற்கையாகப் போய்விட்ட சூழலில், புதிதாய்
உலகத்தில் பிறந்து வளர்ந்து வரும் மானுடசமூகத்திற்கு உலகியலை
உணர்த்தவேண்டிய தேவை காலநெருக்கடியால் எப்படியோ ஏற்பட்டு விடுகிறது. இப்படிப்பட்ட நெருக்கடியான
சூழலில் பண்பட்ட உள்ளத்தர்களாகிய பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் போன்ற ஞான ஆசிரியர்கள்
தாங்களாகவே முன்வந்து காலத்தின் தேவை உணர்ந்து செயலாற்றுகிறார்கள்.
உலகியல் பட்டுப்போய் ஒழுக்கம் கெட்டுப்போய் இருக்கிற சமூகத்தைத் தன்னால் இயன்றமட்டும்
சீர்திருத்த வேண்டும் என்பதை நோக்கமாகக்கொண்டு சித்தர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும்,
வள்ளலார் இராமலிங்க அடிகளைப் போன்ற ஞானியர்களும் சிந்தித்துச் சொன்ன கருத்துக்களை உலகெங்கும்
வாழும் மக்களிடத்து தன் சொல்லாலும் எழுத்தாலும் எடுத்துக்கூறி, செயலாலும் வாழ்ந்துகாட்டி
தொண்டாற்றி வருபவர் பகுத்தறிவாளர் திருவாசகவாரி
பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் அவர்கள்.
அப்படி அவர் உலகைப் பண்படுத்த பயன்படுத்தும் எழுத்தாயுதங்களில் ஒன்று “திருவள்ளுவர்
இறைநெறி” என்னும் நூல். இந்நூல் ஒரு குரு தன் சீடன் எழுப்பும் ஐயங்களுக்கு விடைகூறும்
பாங்கில் எழுதப்பட்டுள்ளது. ஒரு மனிதன் செம்மாந்த வாழ்க்கை வாழ குறள்நெறி எந்த வகையிலெல்லாம்
வழிகாட்டுகிறது என்பதை 82 தலைப்புகளில்(வினாக்களில்) ஆழமாகவும் அதேவேளையில் சாதாரண
வாசகனுக்கும் புரியும்படியும் விளக்கியுள்ளார்.
இறைவனுக்குரிய பண்புகள் யாவை?, இறைவனின் திருவடியைப் பற்றிக்கொள்வதே பிறவிப் பயன்,
அதை அடைய வேண்டுமென்றால் ஆசையைத் துறக்கவேண்டும், அறத்தோடு நடந்துகொள்ள வேண்டும், அதற்கு
அடிப்படையாய் அமைவது மனத்தூய்மை, அது தூய்மையாக அமைய உண்மை பேச வேண்டும். எதையும் எதிர்பார்க்காத
ஒப்புரவு வேண்டும் என்பதை எடுத்துக்கூறி அப்படி நடந்தால் மீண்டும் பிறவாமை என்கிற பேறு
கிட்டும் என்பன போன்ற மெய்யியல் கருத்துக்களை அமிழ்தத்தைக் கடைந்து அமிழ்தம் எடுக்கிற
பணியாக திருக்குறளிலிருந்து திரட்டித் தந்திருக்கிறார்.
தன் கருத்துக்கு வலுசேர்க்க திருவாசகம், திருமந்திரம், திருவாய்மொழி, சிவஞானபோதம்,
திருவருட்பா, சித்தர் இலக்கியங்கள் உள்ளிட்ட பல்வேறு ஞானப் பனுவல்களை துணைக்கு வைத்துக்கொண்டு
மனத்தூய்மையும் ஒப்புரவறிதலும், வாய்மையுமே பிறவித் துன்பத்தைத் தீர்ப்பதற்கு ஒரே வழி
அதுவே திருவள்ளுவர் காட்டும் இறைநெறி என்பதை மனங்கொள்ளத்தக்க வகையில் எடுத்துரைத்துள்ளார்.
பேராசையால் தான் துன்புறுவதோடு உடன் இருப்பவரையும் துன்பத்தில் ஆழ்த்துவோர் மனந்திருந்த இதுஒரு மருந்து, புறவுலக மாயைகளால் இருண்ட மனங்களுக்கு ஒரு கைவிளக்கு. இந்நூலுக்கு து.கோ. வைணவக் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் வெ.இராம்ராஜ் அவர்கள் அணிந்தூரை வழங்கியுள்ளார்.
இந்நூலின்பக்கங்கள் நூறு
இருப்பதோ திருக்குறட் சாறு
வாங்கிப் படிப்பது நம் பேறு
முனைவர் ச. நீலமேகன்
neelameganphd@gmail.com
***
நூல் கிடைக்குமிடம்;-
ஜோதி பதிப்பகம்
எண்:2/1067,
11 ஆவது தெரு, 2 ஆவது குறுக்குத் தெரு
முகப்பேர்
மேற்கு, சென்னை – 600 037
கைபேசி:
9940190616.
விலை: ரூ.
150/-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக