![]() |
கவிஞர் மு. மேத்தா |
கண்ணீர்ப்
பூக்கள்
மு. மேத்தா
வாழை
மரத்தின்
சபதம்
வளமான சூழ்நிலையில் வளர்வேன் - ஆனால்
வறியவரின் கைகளிலே தவழ்வேன்
மலிவான விலையில்நான் கடைகளிலே
கிடைப்பேன் – ஏழை
மக்களது ஆப்பிள்மரம் என்ற பெயர்
எடுப்பேன்!
மரங்களில் நான் ஏழை - எனக்கு
வைத்த பெயர் வாழை!
*
கருத்தாங்கிப் பிள்ளையினைப் பெற்றெடுத்துக்
கண்மூடும் புத்திரிநான் எனக்குக் கீழே
குருத்துவிடும் கன்றுக்கு வழியை விட்டுக்
குறிப்பறிந்து ஒதுங்குவதால் -
தலைமுறையின் தத்துவத்தைப் புவிக்குக் காட்டும்.
தடயம் நான்!
வானத்தைத் தொடுவதற்குக் கனவு காணும்
வழக்கமில்லை என்னிடத்தில் மயக்கயில்லை!
மானிடரின் புழுதிக்கால் பதியும் இந்த
மண்ணுடன் என் உறவதிகம்! ஆத லாலே.
மரங்களில் நான் குட்டை மரம்
மனிதர்களின் கைகளுக்கு
இலகுவாக எட்டும் மரம்!
மானிடர் செய்யும் சிவப்பு விளம்பரம்
மதிலின் முதுகில் மாட்டியிருக்கும் – நானோ
தானாய் எழுந்து தட்டி கட்டிய
தரையின் பச்சை விளம்பரப் பலகை!
அழைப்பிதழ்கள் திருமணத்தின்
அறிமுகங்கள்! நாங்கள்
அடையாள மரங்கள்!
கல்யாண வீடுகளில்
காவலுக்கு நிற்கும்
துவார பாலகர்கள்!
குட்டை மரமெனும் குறையை – என்
பெரிய இலைகளால் பெயர்த்துத் தகர்த்தவன் நான்.
என் இலைகள்...
மயிலிடம் கடன் வாங்காத
பச்சை நரம்புகளால் ஆன
தோகைகள்!
கலைகளில் இன்றியமையாத
சமையற் கலை – என்
இலை வாகனத்தில்
ஏறி வரும்போது
விரல் வரவேற்பு
விரைவாகக் கிடைக்கும்!
என் இலைகள்...
உபசரிப்பின் இலக்கியங்கள்
விருந்தினரின் அந்தஸ்தை
எடைபோடும் இயந்திரங்கள்!
சோற்று பூமியின்
சொர்க்க வாசல்கள்
ஏழை வயிறுகளின்
இலட்சியக் கனாக்கள்!
இந்த மனிதர்கள்
உண்பதற்கு முன்னர்
உணவு இலை என்பார்கள்
உண்டு முடித்த பின்னர்
எச்சில் இலையென்று
எறிந்து விடுவார்கள்
கூடத்தில் மரியாதைப் பூச்சு
குப்பைத் தொட்டிகளில் எங்கள்
ஆயாச மூச்சு!
தொட்டி இலையையும்
துடைத்துச் சாப்பிட
இந்த தேசத்தின்
தெரு ராஜாக்கள்
ஒருவரோடொருவர்
கட்டிப் புரள்கிறபோது
எதிர்கால இருட்டை
எண்ணிப் பதைக்கிற – என்
இதய வேதனைக்கு
உவமைகள் ஏது?
*
மனித மரங்களைப் பார்த்துப் பார்த்து
மற்ற மரமெலாம் வேர்த்து வேர்த்து
மனப் புழுக்கத்தின் குலுக்கல் – அதில்
வந்து கனிந்தவை பழங்கள்!
பகை மூட்டிப் பழுக்க வைக்கும்
பழங்களினால் உலகில்
பாகிஸ்தானில் நடந்தது போல
பாகப் பிரிவினை நடக்கும்
புகை மூட்டிப் பழுக்க வைக்கும் - என்
புரட்சிப் பழங்களினால்
பூ வயிறு சிரிக்கும்
பொலிவிழந்த உடல் செழிக்கும்.
மறுபடியும் உழைப்பதற்குப்
புதுவலிமை பிறக்கும்
சீவாத தலையோடு பிறருடைய தலையைச்
சிங்காரம் செய்வதற்குப் பூச்சரங்கள் தொடுக்கும்
பாவாடைக் காரிகளின் நளின விர லோடு
பழக்கமுள்ள நாருக்குப் படைப்பாளி நான்!
அந்த நார்கள்
என்னுடைய
உடை உரிப்புகள்
சத்தம் போடாத
சதைக் கிழிசல்கள்!
பூவைப் போல் உயர் பிறப்பு
இல்லாத நாரை
பூக்களுடன் சேர்த்துவைத்துச்
சம மரியாதை
வாங்கித் தந்ததென்
சுய மரியாதை!
*
என்
மட்டைச் சட்டையோ –
சோர்ந்த நாசிக்குச்
சுறுசுறுப்புக் கொடுக்கும்
மூக்குப் பொடியின்
தூக்குத் தூக்கி!
புகையிலைத் தூளின்
பொட்டலப் பெட்டகம்!
மரங்களில் நான் ஏழை – எனக்கு
வைத்த பெயர் வாழை
*
எப்போதும் நான்
என்
இலைச் சிறகுகளை
விரித்தே வைத்திருப்பதால்
பறக்கத்
தயாராயிருக்கும்
மிக் விமானம் போல
பார்வைக்குத் தெரிகிறேன்.
இதனால் -
இந்த
மண்ணில் பெருகிவரும்
மாபெரிய கொடுமைகளை
கோடையிடித் தாக்குதலை
கூக்குரலின் ஆர்ப்பரிப்பை
கொலைகளது கணக்கெடுப்பைக்
கண்டு மனமொடிந்து
மனமிடிந்து
என்றேனும் -
என்றேனும் ஒரு நாள்
இந்த பூமியிலிருந்து
பறந்து போய்விடுவேன்
என்று
எவரேனும் எதிர்பார்த்தால் –
அவர்கள்
ஏமாந்து போனார்கள்!
நான் -
மண்ணில் வேரோடி
மாநிலத்தில் கால் பதித்து
வீசும் புயற்காற்றை
விழும் வரைக்கும் நின்றெதிர்ப்பேன்
நின்றெதிர்த்த முடிவினில் நான்
நிலத்தில் விழுந்து விட்டால் – என்
கன்றெதிர்க்கும்! கன்றுடைய
கன்றெதிர்க்கும்! கன்றுகளின்
கன்றெதிர்க்கும்!
நான் -
வெட்ட வெட்டத்
துளிர்ப்பேன்: தழைப்பேன்:
இறப்பின் மடியினில்
கண்கள் விழிப்பேன்!
என்
ஒவ்வொரு இறப்பும்"
ஒவ்வொரு பிறப்பு!
ஒவ்வொரு பிறப்பும்
தனித்தனிச் சிறப்பு!
மானுட சந்ததி
மறையாத சந்ததி
நானும் அந்த
ஜீவ சங்கிலி
அறுந்து படாமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக