வெள்ளி, 15 செப்டம்பர், 2023

ஒரு கிராமத்து நதி - சிற்பி

 

 



 

ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூல் எழுத்தாளர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களால் எழுதப்பட்டது.

இந்நூல் 1998 இல் வெளியிடப்பட்டது.

இக்கவிதைத் தொகுப்பிற்கு 2002ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

ஒரு கிராமத்து நதி

கவிஞர் சிற்பி

ஓடும் வரலாறு

     

பூங்குன்றன் சொன்னார்:

"இதோ பாருங்க...

உங்க ஊர் ஆத்துலே கிடைச்ச

சங்க காலக் காசு!".

 

காசு அல்ல-

காசின் புகைப்படம்

என்றாலும்

மெல்லக் கசிந்தன கண்கள்.

 

கல்லும் கரடுமாய்

நெடுஞ்சாலைகளின் கரங்களுக்கு

எட்டாமல்

ஒளிந்துகொண்டிருக்கும்

இந்த மண்ணிலும்

சரித்திரச் சுவடுகளா?.

 

ஆடி ஆடி நகரும்

நடனக்கார நதி

இல்லாவிட்டால்

சபிக்கப்பட்ட இந்தக் கிராமத்தை

யார் சீண்டுவார்கள்?

 

மரியாதைக்குப் போட்டிருக்கும்

மாராப்புச் சேலையே

இந்த நதிதானே?

 

இப்படி நைந்து போன மனதுக்குத்

தைலம் பூசிற்று

தொல்பொருள் ஆய்வாளர்

சொன்ன தகவல்...

 

*

ஆழியாறு அணைக்கட்டுக்கு மேலே

திகம்பர சமணர் கற்படுக்கைகள் உண்டு

தீர்த்தங்கரர் சிலையும் உண்டு

அறம் பழுத்த அந்நாள் துறவிகளின்

திருவடி தீண்டிய

தீர்த்தம் இந்நதி.

 

ஆற்றில் மிதந்து வந்த

மன்னவன் தோட்டத்து மாங்கனியை

ஆசையோடு எடுத்த அவளைக்

கொல்லுவித்த கொடும்பாவி

சங்கக் கவிதையில் ரத்தக்கறை தீற்றும்

நன்னன் எனும் பெரும்பாவி

ஆட்சி புரிந்திருந்த ஆனைமலை வழியாக

அழுது கொண்டே வருகிறது

இந்த நதி.

இன்னும் எத்தனை ரகசியங்கள்

எத்தனை யவனக் காசுகள்

ஓ நதியே! உன் மடியில்?

 

*

இன்னொரு முறை

பூங்குன்றனை அழைத்துவர வேண்டும்

இந்தச் சரித்திரத்தோடு

கை குலுக்கிக் கொள்ள...

மத்தியதரைக் கடற்கரையில்

அச்சடித்த தங்க நாணயங்களின்

புதையல்களை

இங்கு கண்டெடுக்க...

 

         ****

கருத்துகள் இல்லை: